பணகுடி முந்தைய காலத்தில் பனைவளம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இங்கு கத்தோலிக்க மக்கள் இல்லை. வடக்கன்குளம், காவல்கிணறு, கள்ளிகுளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ நாடார்கள் பனைத்தொழில் செய்வதற்காக இப்பகுதியில் வந்து குடியேறினார்கள். கி.பி. 1870-ல் வடக்கன்குளம் பங்குத்தந்தையாக இருந்த Fr. கிரகோரி அவர்கள் 5 ஏக்கர் நிலத்தை பணகுடியில் வாங்கி 2 ஏக்கர் நிலத்தை கோயில் கட்டுவதற்காகவும், மீதி 3 ஏக்கர் நிலத்தை ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திற்கு 2 சென்ட் வீதம் இனாமாக கொடுத்ததாக கூறப்படுகிறது...
மேலும் படிக்க
இத்தாலியில் இறைப்பணி செய்து தாய் மண்ணை நோக்கி வந்த என்னை வரவேற்றது புனித
சூசையப்பர் ஆலயம். சிறுவயதிலிருந்தே புனித சூசையப்பர் என்றாலே எனக்கு
தனிப்பற்று. எனவே பணகுடி பங்குத்தளத்தை நான் மிகவும் விரும்பி பெற்றுக்
கொண்டேன். அதிலும் புனித சூசையப்பருக்கு புதிய ஆலயம் சுட்டும் பணி எனக்கு
கிடைத்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய குருத்துவ வாழ்வில் இது
எனக்கு கிடைத்த மாபெரும் பாக்கியமாக கருதுகிறேன். எனது குருத்துவ வாழ்வில்
என்றும் மறக்க முடியாதது பணகுடி பங்கு ஆலயம் கட்டும் பணியில் என்னோடு
இருந்து செயல்பட்ட எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி கொள்கிறேன். பங்கின்
ஆலய பணிக்காக என்னால் முடிந்தவரை பணி செய்கிறேன். ஆயிரக்கணக்கான பணகுடி
மக்களின் நல்லுள்ளத்தாலும், பேராதரவாலும், தியாக நன்கொடைகளாலும், கடின
உழைப்பாலும் கட்டப்பட்டதுதான் நம் ஆலயம். நாம் மட்டுமல்ல, மத, இன, மொழி,
ஊர் கடந்து தாராளமான நன்கொடைகளால் நம் ஆலயத்தை தாங்கிய சூசையப்பர்
பக்தர்கள் ஏராளம். அந்த நல்லுள்ளங்களை தந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்
கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கொடைகளும், ஆலய கட்டுமான வரிகளும்
பிரிப்பதற்காக நான், ஊர் தலைவர், நிர்வாகிகள், கட்டுமான பணி நண்பர்களுடன்
உங்கள் வீடு தேடி வந்து ஓராயிரம் தடவை அன்பு தொல்லை கொடுத்திருப்பேன்.
ஆனால் பணகுடி இறைமக்கள் என்னை மதித்து ஆதரவும், ஒத்துழைப்பும் தந்து
புன்முறுவலோடு எங்களை வரவேற்றீர்கள்! கொடுத்தீர்கள்! அதன் தாக்கம்தான்
தென்தமிழகத்திலே தலைசிறந்த கோயிலாக உருப்பெற்றுள்ளது புனித சூசையப்பர்
திருத்தலம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுவோம். நற்கருணைப் பேழையில்
ஆண்டவர் இயேசுவின் உயிருள்ள பிரசன்னமிருப்பதால் அன்றாடம் ஆலயத்திற்கு வந்து
நலம் தரும் நற்கருணையைப் பெற்று சுகம் பெறுவோம். என் தந்தையின் இல்லத்தை
பொழுதுபோக்கு இடமாக்கக் கூடாது என்ற இயேசுவின் கூற்றை வாழ்வாக்கி இந்த
பணகுடி மண்ணை புண்ணிய பூமியாக மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை
உணர்ந்து அர்த்தத்தோடு இவ்விழாவை கொண்டாடுவோம்.
இவ் ஆலயம்
உருப்பெற காரணமாயிருந்த ஊர் நிர்வாகிகள், கட்டுமானக் குழு நண்பர்கள்,
இறைமக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் அன்பிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும்
சிறப்பான பாராட்டுக்கள். வானுயர்ந்த புதிய ஆலய கோபுரம் போன்று நம் மக்களின்
வாழ்வும் வளமும், ஆன்மீகமும் தலைசிறந்து உயர்ந்திட மனதார வாழ்த்துகிறேன்.
Copyright © St.Joseph Church Panagudi. All Rights Reserved.